வடிவுடை அம்மன் தியாகராஜர் கோவில் தல வரலாறு:
முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா கேட்ட போது சிவபெருமான் தன் சகதியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்ப கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் அமையப் பெற்றது. மற்றொரு காரணமாக இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு இத்தலம் ஒற்றியூர் என அழைக்கப்பட்டது.
பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும், பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் லிங்கத் திருமேனி புற்று மண்ணால் ஆனது. வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் லிங்கம் கவசத்தால் மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்பட்டு 3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
கோவில் விபரம்:
இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி 5 நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. கிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. மேலும் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் நவக்கிரக சந்நிதி, விநாயகர் சந்நிதி, பாலசுப்ரமணியர் சந்நிதி மற்றும் குழந்தையீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. மேற்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அண்ணாமலையார் சந்நிதியும், பின்பு வரிசையாக ஜம்புலிங்கேஸ்வரர் சந்நிதி, நாகலிங்கேஸ்வரர் சந்நிதி, காளத்திநாதர் சந்நிதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளன. வடமேற்கு மூலையில் ஒற்றீஸ்வரர் சந்நிதி தனி முகப்பு மண்டபத்துடன் அமைந்திருக்கிறது. வடக்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் பைரவர் சந்நிதி, கல்யாணசுந்தரர் சந்நிதி இருக்கின்றன. பைரவர் வடக்கு நோக்கி நின்ற நிலையில் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார். தலமரம் மகிழமரம் இந்த வடக்கு வெளிப் பிரகாரத்தில் தான் உள்ளது.
ஆதிபுரீஸ்வரர் சந்நிதி:
மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு ராஜகோபுர வாயிலுக்கு நேரே இல்லாமல் சற்று இடதுபுறம் தள்ளி அமைந்திருக்கிறது. தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் வழியாக மூலவர் கருவறையுள்ள பகுதியை அடையலாம். தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் அருகில் கிழக்கு நோக்கிய தியாகராஜர் சந்நிதி இருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறைப் பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் இத்தலத்திற்கு பெருமை சேர்க்கும் வட்டப்பாறை அம்மன் சந்நிதி வடக்கு நோக்கி இருக்கிறது. இச்சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள வாயில் வழியாக வடக்கு வெளிச்சுற்றுப் பிரகாரத்தை அடையலாம். வடமொழியில் வால்மீகீ எழுதிய இராமாயணத்தை தமிழில் எழுதியது கவிச் சக்கரவர்த்தி என்று புகழப்படும் கம்பர். கம்ப இராமாயணம் எழுதியது இந்த திருவொற்றியூர் தலத்தில் தான். வட்டப்பாறை அம்மனை வணங்கிய பிறகே கம்பர் இராமாயணம் எழுத தொடங்குவார். அவர் எழுதுவதற்கு உதவியாக சாதாரண பெண் உருவில் கையில் தீப்பந்தம் ஏந்தி நின்று அருள் செய்தவள் இந்த வட்டப்பாறை அம்மன் என்பது ஒரு சிறப்புக்குரிய செய்தியாகும்.
27 நட்சத்திரங்கள் இங்கு வந்த நட்சத்திரங்களின் நாயகனான சிவபெருமானை வழிபட்டு ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி முக்தி பெற்று பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றன. அந்தந்த ராசிக்காரர்கள் பிறந்த நாளில் அந்த ராசி லிங்கத்தை வழிபடுவது இத்தலத்தில் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் வரிசையாக உள்ளன.
தல விருட்சம் அத்தி மரம். மகிழ மரமும் சுந்தரர் திருமணத்தால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சுந்தரர் திருமணம்:
சுந்தரர் திருவொற்றியூர் இறைவனை தரிசிக்க வந்தபோது, இறைவனுக்கு பூமாலை கட்டித் தரும் தொண்டினை செய்து வந்த சங்கிலி நாச்சியாரைக் கண்டார். அவளை மணந்து கொள்ள விரும்பி இறைவனை அவளிடம் காதல் தூது செல்லும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி சங்கிலி நாச்சியாரின் கனவில் இறைவன் தோன்றி சுந்தரரை மணந்து கொள்ளும்படி கூறினார். சுந்தரர் ஏற்கனவே திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆகையால் என்னைவிட்டுப் பிரிந்து சென்று விடுவாரே என்று சங்கிலி நாச்சியார் கூறினார். இறைவன் இதை சுந்தரரிடம் கூறினார். அதற்கு சுந்தரர் இறைவனிடம் "ஊர் ஊராகச் சென்று இறைவனைப் பாடும் நான் ஒரே ஊரில் இருப்பது இயலாத காரியம் என்றும், இறைவன் முன் சங்கிலி நாச்சியாரிடம் உன்னைப் பிரிய மாட்டேன் என்ற் சத்தியம் செய்து கொடுத்தால் அதை மீற முடியாது என்பதாலும்" சத்தியம் செய்யும் சமயத்தில் சந்நிதியில் இல்லாமல் மகிழ மரத்தடியில் ஒளிந்து கொள்ளும் படியும் கூறினார். இந்த விபரத்தை இறைவன் சங்கிலி நாச்சியாரிடம் போய் கூறிவிட்டார். எனவே திருமணம் நடக்கும் சமயம் சங்கிலி நாச்சியார் சுந்தரரிடம் மானிடராகிய நாம் தெய்வ சந்நிதானத்தில் சத்தியம் செய்வது முறையல்ல என்று கூறி மகிழ மரத்தடியில் சபதம் செய்து கொடுக்கும்படி கேட்டிக் கொண்டார். சுந்தரரும் வேறு வழியின்றி மகிழ மரத்தடியில் ஒளிந்து இருந்த இறைவனை மூன்று முறை வலம் வந்து "என்றும் உன்னைப் பிரிய மாட்டேன்" என்று சத்தியம் செய்து சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார்.
இந்த மகிழமரம் வடக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது. இந்த சபத நிகழ்ச்சி இன்றும் மாசிப் பெருவிழாவின் போது "மகிழடி சேவை" விழாவாக நடைபெறுகிறது.
Temple address
Arulmighu Adipureeswarar Temple
Tiruvottriyur
Chennai
PIN 600019
No comments:
Post a Comment